காதல்கொள்ள வாராயோ...

By Madhu_dr_cool

40.6K 1.9K 1.1K

Love and love only. A refreshing read, guaranteed. More

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
Mood boards!

21

791 47 20
By Madhu_dr_cool

"பாஸ்.. எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. விவாண்ட்டா ஹாலை ரிசர்வ் பண்ணியாச்சு, நைட் பத்து மணி வரையில. ஈமெயில்ல எல்லா பார்ட்னர்ஸுக்கும் இன்வைட் அனுப்பியாச்சு. அவங்க மிஸ் பண்ணிடாம இருக்கறதுக்காக அவங்களோட அசிஸ்டென்ட்களுக்கு ரிமைண்டர் அனுப்பியாச்சு. போதும்தானே?
உங்களுக்கு இருந்த கான்ட்ராக்டர் மீட்டிங்கை மாத்தி வைக்கணும். நாளைக்கு மதியம் ஓகேவா?
ஈவெண்ட்டுக்காக மூணு மெனு தயாரிச்சிருக்கோம். நீங்க பார்த்து எது வேணும்னு சொன்னா அதையே ஃபைனல் பண்ணிடலாம்"

ஆதித் லேசாக சிரிக்க, ராஜீவ் குழப்பமாகப் பார்த்தான். "ஏன் பாஸ்..?"

"இல்ல, கல்யாணம் நடந்தப்போ கூட என்கிட்ட இவ்ளோ ஒபீனியன் கேட்கல யாரும். அதை நினைச்சப்ப சிரிப்பு வந்துடுச்சு."

ஆதித்தின் கண்களில் தோன்றி மறைந்த வெறுமையை ராஜீவ் கவனித்தான்.

"நடந்தது நடந்துடுச்சு, விடுங்க பாஸ். நேற்றைப் பத்தியே நினைச்சிட்டு இருந்தா நாளையைத் தொலைச்சிடுவோம்னு எனக்குத் தெரிஞ்ச ஜீனியஸ் ஒருத்தர் சொல்லியிருக்கார்.."

ஆதித் தலையை சரித்துச் சிரித்தான்.
"அது நான் சொன்னது."

முறுவலுடனே ராஜீவின் கையிலிருந்த மெனுக்களை வாங்கி ஒருமுறை பார்த்தவன், பின் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீட்டினான்.
"இதை ஓகே பண்ணிடு."

"ஷ்யூர் பாஸ். ஈவ்னிங் உங்க வொய்ஃபையும் மறக்காம கூட்டிட்டு வந்துடுங்க."

ஆதித் பெருமூச்சுடன் புன்னகைத்தான்.
"வேற வழி!?"

*

தாரா சாலையோரம் காத்திருக்க, சொன்னதுபோலவே பதினைந்து நிமிடத்தில் வந்துவிட்டான் அவன். அரைக்கை டீஷர்ட்டும் ஜீன்சும் அணிந்து, கையில் ஒரு சின்ன உணவுப்பெட்டியோடு.

"கல்கத்தாவின் சார்பாக!" என்றவாறு அதைத் தாராவிடம் நீட்ட, அவளும் ஆர்வமாக வாங்கிப் பிரித்தாள் அதை. குட்டிக் குட்டியாக இளஞ்சிவப்பு ரசகுல்லாக்கள் இருந்தன அதில்.

"வாவ்... தேங்க்ஸ் அபிமன்யு!"

"என்னை 'மனு'ன்னு கூப்பிடலாம். கொல்கத்தாவுல எல்லாப் பெயர்களையும் முன்னும் பின்னும் சுருக்கிக் கூப்பிடறது வழக்கம்"

"ஓ.. மனு.. அழகாத்தான் இருக்கு. அப்படியே கூப்பிட்டாப் போச்சு!"

அவன் இனிப்பொன்றைக் கையில் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட நீட்டினான்.
"கொல்கத்தா இனிப்புக்கு ஸ்பெஷல்..  வேற எந்த ஊர்லயும் இந்தளவு ருசியான ஸ்வீட்ஸ் கிடைக்காது. சிட்டி ஆஃப் ஜாய்னு பேரு வந்ததுக்கு, எங்க ஊர் சாப்பாடும் மிகப்பெரிய காரணம்!"

தாராவும் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். கண்கள் அதன் சுவையில் விரிய, 'ம்ம்' என ஆச்சரியக் குரல் எழுப்பினாள் அவள்.

"உண்மைதான்... இவ்ளோ சூப்பரான ரசகுல்லாவை இதுவரை சாப்பிட்டதே இல்ல நான்!"

பெட்டியை அவளிடம் தந்தவன், "இனி ரசகுல்லா சாப்பிடும் போதெல்லாம் என்னை நினைச்சுக்க" என்றான்.

தாரா வினோதமாகப் பார்த்தாள் அவனை. ஆனால் அவனது மாசற்ற நீலவண்ண விழிகளில் எந்தவொரு அழுக்கான எண்ணத்தையும் காணவில்லை.

"போலாமா?" என்றவாறு தாராவிற்காகக் கைநீட்டினான் அவன். தயங்கினாலும் மறுக்கத் தோன்றாமல் அவளும் கையைப் பிடிக்க, சாலைக் கடந்து விரைந்தான் அவன். அவனது நடைக்கு இணையாக நடக்க இயலாமல் சற்றே ஓட்டமும் நடையுமாக, ஆனால் சிரிப்புக் குறையாமல், வந்தாள் தாராவும்.

ஒரு திருப்பத்தில் பிரதான சாலையை அடைந்துவிட, சாலையின் நடுவே தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த ட்ராம் வண்டிகளை அருகாமையில் பார்த்து வியந்து வாய்பிளந்தாள் அவள். பிடித்த கையை விடாமல் அவளை இழுத்துச்சென்று, ஒரு ட்ராமில் ஏறினான் அவன். ஜன்னலருகே அவளை அமர்த்தியவன், அவளுக்கு ஒரு சீட் பின்னால் அமர்ந்துகொண்டான்.

நாலாபுறம் கண்களைச் சுழற்றி வேடிக்கை பார்த்தாள் தாரா. கட்டிடங்கள், ரிக்க்ஷாக்கள், தெருவோரக் கடைகள், நடைபாதையில் விரையும் மனிதர்கள் என எல்லாமே புதிதாகப் பார்ப்பதுபோலப் பார்த்தாள். வங்காளத்து மனிதர்கள் எல்லாருமே அவள் பார்த்தபோது புன்னகைத்துக்  கையசைத்தனர்.

சிரிப்பில்லாத முகத்தையே பார்க்கவில்லை அவளும். பெண்களும் குழந்தைகளும் அழகழகான உடைகளில் நெஞ்சைக் கவர்ந்தனர். நிறங்கள் நிறைந்திருந்தது நகரமே.

"எவ்வளவு அழகான சிட்டி, இல்ல?"
வாய்க்கொள்ளாப் புன்னகையுடன் அவள் திரும்பி வினவ, "அழகுதான்" என்றான் மனு, அவளைப் பார்த்தபடி.

"இங்க இறங்கணும்" என்று அவள் கைப்பிடித்து இறக்கி, நடைபாதையில் கூட்டிச்சென்றான்.

பெங்காலின் மக்களை அருகில் பார்த்தபோது, ஒன்றுதான் அவள் மனதில் தோன்றியது.

வாளிப்பு. வாளிப்பென்றால் அப்படியொரு வாளிப்பு. தொட்டால் சிவக்கும் பட்டுப்போன்ற மேனி, மினுமினுக்கும் தோல். பஞ்சுபோன்ற தேகம். உருண்டு திரண்ட அங்கங்கள். ஆரோக்கியம் தம்பும் விழிகள். சொல்லி வைத்தாற்போல அனைவருக்குமே பூர்ணச்சந்திர முகம். அவர்களின் வட்டமுக வடிவழகைப் பார்க்கையில், பூமியின் மொத்த செழிப்புக்கும் பங்காளிகள் பெங்காலிகளே எனத் தோன்றியது.

ஓரிடத்தில் நின்று தாராவைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

"எங்க வந்திருக்கோம்னு தெரியுமா? நிமிர்ந்து பாரு"

அவளும் நிமிர்ந்து பார்க்க, விண்ணை முட்டுமளவு உயர்ந்த ஒற்றை வெண்கோபுரம் நின்றது கம்பீரமாய்.

"என்ன இது?"

"மொத்த கொல்கத்தாவையும் பத்து நிமிஷத்துல பார்க்கலாம், வா.."

அவளைக் கூட்டிச்சென்றவன் முன்பகுதியில் இருந்த காவலர்களிடம் பெங்காலியில் பேசி அனுமதி பெற்று அவளை அழைத்துக்கொண்டு கோபுரத்தின் உட்புறமிருந்த படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான்.

"ஜஸ்ட் இருநூறு படிகள் தான்.. அஞ்சு நிமிஷத்துல ஏறிடலாம்"

"ம்ம், எங்க ஊர் மருதமலையே நூத்தம்பது படிதான்.. அதையே அரைமணிநேரம் ஏறுவனே நானு.."

கோபுரத்தின் உச்சியை அடைந்தபோது, அந்த சிரமமெல்லாம் ஒன்றுமே இல்லையெனத் தோன்றியது. கொல்கத்தா நகரின் மொத்த எழிலும் ஓவியம்போல அவள் கண்முன்னால் விரிந்து கிடந்தது. மூச்சுத் தொண்டையில் சிக்கியது அவளுக்கு.

அவளருகே வந்து மனுவும் நின்றான்.
"இதுதான் ஸாகித் மினார். உலகத்திலயே எகிப்தியன், டர்கிஷ், சிரியன் கட்டிடக்கலைகளை இணைச்சுக் கட்டின முதல் நினைவுச் சின்னம். இருநூறு வருஷக் கட்டிடம். பிரிட்டிஷ் கவர்மென்ட் கட்டியது."

கைநீட்டி தூரத்துத் தொடுவானத்தைக் காட்டியவன், "அதோ தெரியுதே.. அது விக்டோரியா மெமோரியல். அப்பறம் அந்த இடம் முழுக்க எஸ்பிளனேட். கீழே இருக்கறது ஸாகித் மைதான். ரவீந்திரநாத் தாகூர், கோகலே, எல்லாரும் இந்த மைதானத்துல பேசியிருக்காங்க. இப்ப இது இந்திய விடுதலை இயக்கத்திற்கான நினைவுச் சின்னம்," என விளக்கிட, கண்விலக்காமல் அதைக் காதில் வாங்கிக்கொண்டாள் அவள்.

"ஒரு சிட்டி எப்படித்தான் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இன்னும் இன்னும் அழகா தெரிய முடியுமோ!? எனக்குக் கொல்கத்தாவை ரொம்பப் பிடிச்சிருக்கு மனு..."

'ஊரை உங்களுக்கும், உங்களை ஊருக்கும் சீக்கிரமே பிடிச்சுப் போயிடும்!'

ராஜீவின் வார்த்தைகள் நினைவிற்கு வர, எத்தனை சரியாக சொல்லியிருக்கிறான் என்று நினைத்தவள் லேசாகச் சிரித்தாள்.

மனு அவளிடம் திரும்பி, "ஆசைதீர ஃபோட்டோ எடுத்துக்கோ.. ஏன்னா பர்மிஷன் இல்லாம இங்க வரவே முடியாது. பர்மிஷன் வாங்கறது அவ்ளோ ஈஸியும் கிடையாது.. ஸோ, நீ இங்க மறுபடி எப்ப வருவன்னு தெரியாது" என்றான்.

சரியெனக் கைபேசியை எடுத்தவள், அவனையும் நிற்கச்செய்து ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுத்தாள். மனது நிறையும்வரை அங்கே நேரம் செலவிட்டுவிட்டு, அவனுடன் இறங்கி மைதானத்திற்கு வந்தாள் அவள். சுற்றிலும் நிறையப் பேர் நடைப்பயிற்சியில் இருக்க, சிலர் அமைதியாக அமர்ந்து நாளிதழ்கள் வாசிக்க, சிலரோ கல்பெஞ்ச்சில் கண்ணயர்ந்திருக்க, தாராவும் மனுவும் சிறிதுநேரம் அங்கேயே நடந்தனர்.

"பசிக்குது.. எங்கயாச்சும் சாப்பிடப் போலாமா தாரா?"

கைக்கடிகாரத்தை அவன் பார்க்க, அவளும் அதை எட்டிப்பார்த்துத் திகைத்தாள்.
"மணி ஒண்ணாச்சு.. வீட்டுல இந்திராணி அக்காகிட்ட சொல்லாம நான் வந்திருக்கேன்.. தேடினா என்ன பண்றது?"

அவள் பதறிடத் தொடங்க, "ஹேய், ரிலாக்ஸ்.. சந்தோஷ்பூர் தானே, இருபது நிமிஷத்துல கூட்டிட்டுப் போறேன், சரியா?" என்றுவிட்டு, கையுயர்த்தி ஒரு மஞ்சள் டாக்சியை அழைத்தான்.

"யேகானே ஆமாரா யேதே ஹபே?"

"வீடு இருக்கற ஸ்ட்ரீட் பேரு தெரியுமா?" எனத் தாராவிடம் திரும்பி வினவினான் மனு.

தலையைப் பிடித்துக்கொண்டு யோசித்தாள் அவள். 'என்னவோ சொன்னானே..'

"ஹான்!! வாட்சன் ஸ்ட்ரீட்!" சட்டென நினைவுவந்து அவள் உரக்கச் சொல்ல, மனு சிரித்தவாறே அவளை டாக்சியில் ஏறச் செய்தான். அவன் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்துகொண்டு, "சலேன்" என்றிட, வண்டி எடுத்ததுமே அதிவேகத்தில் பாய்ந்தது.

சரியாக இருபத்தெட்டு நிமிடத்தில் வாட்சன் வீதியில் நுழைந்தது வண்டி. ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்துக்கொண்டே வந்தவள் பரிச்சயமான வீட்டைப் பார்த்ததும் சொன்னாள்.
"அதோ, அந்த வீடுதான்!"

டாக்சியிலிருந்து இறங்கிப் பணம்தர அவள் பையைத் திறக்க, மனு தடுத்தான்.
"நானும் அபார்ட்மெண்ட் வரை போகணும். நான் குடுத்துடறேன்."

தாரா யோசனையாக இருகணங்கள் நின்றாள்.
"சரி, ஆனா அடுத்தமுறை நான்தான் தருவேன்!"

மனு தனது நீலவிழிகளை விரித்து அவளைப் பார்த்தான். "ஷ்யூர்."

டாக்சி கிளம்பியது.
"சீ யூ தாரா... மறுபடி சீக்கிரமே சந்திக்கலாம்!"

"தேங்க்யூ மனு, கண்டிப்பா மறுபடி சந்திக்கலாம்!"

டாக்சி திருப்பத்தில் மறைந்துவிட, முகத்திலிருந்து அழிக்கமுடியாத புன்னகையுடன் வீட்டுக்குள் வந்தாள் அவள்.

இந்திராணி அவளைப் பார்த்ததும் பதறினார்.
"ஆப்னி கோத்தாயா கியேச்சிலே? ஆப்நார் காம்ரே சில்லே நா?"

"வெளியே சும்மா போயிருந்தேன். சாரி, சொல்லாமப் போயிட்டேன்.."
அவரது சரளமான பெங்காலி கூட, சைகைகள் மற்றும் சூழலால் தனக்குப் புரிவதை அவளே வியந்தாள்.

"ஜால்?" (தண்ணீர்?)

"ம்ம், குடுங்க."

அவர் தண்ணீர் கொண்டுவர உள்ளே செல்ல, தாரா மனுவின் நீலவிழிகளை நினைத்துக்கொண்டே மெல்ல சோபாவில் அமர்ந்தாள்.

தண்ணீர் கொண்டுவந்து தந்தவர், "காபார் சான்?" என்றிட, "ஓ.. சாப்பிடலாமே, கை கழுவிட்டு வர்றேன்" என எழுந்தாள்.

இந்திராணி பீங்கான் பாத்திரங்களை எடுத்துவந்து மேசையில் அடுக்கிட, தாரா ஓடிவந்து அமர்ந்து ஆர்வமாக அவைகளைத் திறந்தாள். பல நிறங்களில் பதார்த்தங்கள் இருக்க, இந்திராணி ஒவ்வொன்றாய்ப் பெயர்சொல்லி எடுத்துப் பரிமாற, அவள் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

"மிஷ்டி புலாவ்.. டிம் ஷோர்ஷே.. ஆலுர் டம்"

ஒவ்வொன்றையும் ஆர்வமாக எடுத்து ருசித்துப் பார்த்தாள் தாரா.

"வாவ்.. சூப்பரா இருக்கு இந்திராணி அக்கா! உங்க கைல அன்னபூரணியே குடியிருக்காங்க போல!!"

அவளது சொற்கள் அர்த்தமாகாவிடினும், கண்விரித்து அவள் கூறும் புகழாரம் புரிந்து சிரித்தார் அவர். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, தாரா எட்டிப்பார்த்தாள் அமர்ந்தபடியே.

ஆதித் உள்ளே நுழைய, தாரா சினேகமாகப் புன்னகைத்தாள் அவனைக்கண்டு. அவன் சிரிக்கவில்லை.

"உன்கிட்ட பேசணும்."

Continue Reading

You'll Also Like

206K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
107K 3.3K 40
Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???
120K 4.9K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
37.2K 2.5K 52
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...