தேடல்களோ தீராநதி!

By Jeya_Lakshmi

741 8 8

உறவின் அழகிய தேடல்.. More

முன்னோட்டம்.

130 8 8
By Jeya_Lakshmi

அந்த கன்டைனர்களுக்கு இடையில் நின்று கிசுகிசுப்பாய் வேலையாட்கள் பேசிக்கொண்டிருக்க,

"என்ன இங்க மாநாடு?? வேலை நேரத்துல என்ன பண்றீங்க?" என்ற சூப்பர்வைசரின் அதட்டலில் ஆண்கள் அனைவரும் நகர்ந்து விட,பெண்கள் மட்டும் தங்கள் பேச்சை தொடர்ந்தனர்.

"அட உங்களுக்கு தனியா சொல்லணுமா?" என்றதும்,

"என்ன சார் சும்மா விரட்டிக்கிட்டே இருக்கீங்க? இது லஞ்ச் பிரேக் தானே? விடுங்களேன்", என்று காய்ந்தனர்.

"எனக்கென்ன இப்போ நம்பி சார் வர்ற நேரம். திட்டு வாங்குங்க.", என்று சலித்தபடி அவ்விடம் விட்டு அகன்றார்.

"நம்பி சாராம்ல... போய்யா.. எங்களுக்கு முதலாளி அவரில்லையே.. அப்பறம் என்ன பயம். சும்மா அவர் கத்துறதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. நாங்களும் மனுஷங்க தான? எப்பயுமா உக்கார்ந்து கதை அடிக்கிறோம்? மதிய சாப்பாட்டு நேரத்துல கூட டப்பாவை மூடினதும் வேலையை ஆரம்பிக்க சொன்னா என்ன அர்த்தம்?", என்று சற்றே வயதில் மூத்த பெண்மணி கூற,

"விடுங்க அக்கா. இதெல்லாம் இன்னும் எத்தனை நாளு? நம்ம சின்ன முதலாளி வந்துட்டா எல்லாம் சரியா போய்டும்.", என்று ஒருவர் சமாதானம் சொன்னார்.

"அடிப்போடி.. நானும் அந்த நம்பிக்கையில் தான ஆறு வருஷமா இருக்கேன். ஆனாலும் சின்னவருக்கு அவர் தொழில் இருக்க இதை இப்படி மாமா கையில் கொடுத்துட்டு அப்பப்ப வந்து போறாரு. என்னத்த சொல்றது? நமக்கு எப்போ விடியுமோ?"

இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருந்த வேளையில் அந்த வளாகத்திற்குள் வழுக்கிக்கொண்டு வந்து நின்ற அந்த கருப்பு நிற பென்ஸ் கார்.

அயர்ன் செய்த பளிச்சென்ற இளமஞ்சள் நிற சட்டையும், கறுப்பு நிற கால்சராயும் அணிந்து, மேலைநாட்டு கறுப்பு  நிற தோலாலான காலணி பளிச்சிட, திமிரான நடையோடு உள்ளே வந்தார்  அறிவுடைநம்பி.

அவர் கண்கள் கண்டெய்னர்களை எண்ணியபடி வந்தது. குறிப்பிட்ட கண்டெய்னர் பின்னால் பேச்சுக்குறல் கேட்டதும் அதன் இடைப்பட்ட சந்தில் உள்ளே நுழைந்தவர்,

"இன்னுமா உங்களுக்கு லஞ்ச் பிரேக் முடியல? வாங்கற சம்பளத்துக்கு கொஞ்ச நேரம் வேலை பார்த்தா தான் என்ன? எழுந்து போங்க", என்றதும், பெண்கள் முகத்தில் அதிருப்தி தெரிந்தது.

இன்னும் மதிய உணவு இடைவேளை முடிய பத்து நிமிடம் இருக்கும் போதே இப்படி விரட்டியடிக்கப்படுவதில் மனதில் கோபம் மூண்டாலும், அவர்களில் குடும்ப சூழல் கருதியும், சரியான நேரத்தில் இங்கே சம்பளம் கைக்கு வந்துவிடுவதாலும் ஒன்றும் பேச இயலாது எழுந்து சென்றனர்.

அடுத்து சூப்பர்வைசருக்கு அர்ச்சனைகளை முடித்து விட்டு நம்பி அவருக்கான அறைக்குள் சென்றதும், அங்கே நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த தன் மாமனார் வாசுதேவனின் புகைப்படத்தைப் பார்த்து,

'எவ்ளோ நல்லபடியா நடந்துகிட்டாலும் நீங்க வாங்கி வச்சிருக்கற பேரை தொடக்கூட முடியல.உங்க போட்டோ எப்படி ஆணி அடிச்சு மாட்டி இருக்கோ அப்படியே உங்க மேல உள்ள விசுவாசமும் இங்க மனுஷங்க மனசுல மாட்டி இருக்கு. ஏதோ.. பிரச்சனை வராதவரைக்கும் சரி தான்.' என்று கூறிவிட்டு, தன் இருக்கையில் அமர்ந்தார்.

★★★★

சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல உள்ளே ஊடுருவி அந்த இடத்தை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தது.

மெல்ல தலையை திருப்பிய அவளுக்கு ஏனோ மனதில் சஞ்சலம் குடிக்கொண்டது.

மெல்ல மெல்ல இன்னும் ஆழமாகச் சென்றாள்.

போன முறை இருந்ததை விட இம்முறை அவைகளின் தோற்றமும் அதன் மாறுபாடும் விளங்க,அவளுக்கு கண்கள் கலங்கியது.

காகில்ஸுக்குள் இருந்த அவளின் கண்ணீர் அந்த கடல்நீரில் கலக்காமல் போனது.

மெல்ல மேல் நோக்கி நீந்தினாள். அவள் இருப்பது புளோரிடா மாகாணத்தின்  ஆழ்கடல் பகுதியில்.

அவளின் கண்கள் மெல்ல சுற்றிப் பார்த்தன. முன்பெல்லாம் திரும்பும் திசை யாவிலும் வண்ண வண்ண மீன்களின் உலா இருக்கும். ஆனால் இன்று அதன் நெருக்கம் குறைந்து போய் இருக்கிறது. அந்த வேதனையை அவள் மனம் ஏற்க மறுத்தது.

மீண்டும் மெல்ல நீந்தி நீரின் மேல் பரப்பை அடைந்தாள். அங்கே அவள் வந்த யாட்ச் மெல்லிய அசைவை வெளியிட்டு இருக்க, அவளின் பேராசிரியர் அதிலிருந்து அவளைப் பார்த்து கையசைத்தார்.

அவளும் பதிலுக்கு கையசைத்து விட்டு, அப்பெரும் படகின் பின்புறம் ஏற வசதியாக இருந்த கம்பிப் படிகளை கைகளால் பற்றி ஏறினாள்.

கால்களில் இருந்த ஸ்கூபா டைவிங்கிற்கான காலணியை கழற்றிவள் தன் கண்களில் இருந்த காகிளையும் கழற்றினாள். அவள் கண்களில் கண்ணீரின் அடையாளம் தெரிய, அவளின் பேராசிரியர் மார்ட்டின்,

"வாட் ஹேப்பெண்ட் பேபி?", என்று அக்கறையாக கேட்டதும்,

"போன முறைக்கு இந்த முறை பவழப்பாறையின் அடர்த்தி குறைந்து இருக்கு மார்ட்டின். கூடவே மீன்களின் எண்ணிக்கையும்", என்று சன்னக்குரலில் கூறினாள்.

"பேபி.. நீ போனது கீழே உள்ள படகைப் பற்றி தெரிந்து கொள்ள, ஆனா பவழப்பாறையை பற்றி கவலைப்பட்டுட்டு இருக்க..", என்று சிரித்தார்.

"அதான் அந்த படகைச் சுத்தி வந்து வீடியோ எடுத்தாச்சே மார்ட்டின். போதாதா?", என்றவள் குரலில் சலிப்பு தெரிந்தது.

"என்ன பேபி? நீ ஆசைப்பட்ட படிப்பு. திடீர்னு இவ்ளோ சலிப்பு வருது உனக்கு?", என்று கண்டிக்கும் தொனில் அவர் கூற,

"என்னவோ தெரியல மார்ட்டின். அது மேல என்னவோ பிரியம்", என்று சொல்லிவிட்டு, நேரமாச்சு மார்ட்டின் போகலாம் என்று நகர்ந்துவிட்டாள்.

போகும் அவளை வைத்த கண் வாங்காமல் கண்டார் மார்ட்டின். ஒற்றை பெண் பிள்ளையாய் அவளின் போராட்டங்கள் அனைத்தும் அவர் அறிவார். என்ன தான் தான் அன்பு காட்டினாலும் தன்னையும் ஒரு தொலைவில் நிறுத்தும் அவளின் குணம் தான் அவரை மிகவும் கவர்ந்தது.

"நதியா" என்று சத்தமாக அழைத்தார்.

"என்ன?" என்று அவள் திரும்பிப் பார்த்ததும்,

"தனியா இருக்கக் கஷ்டமா இல்லையா?" என்றார்.

அவரை முறைத்துப்பார்த்த நதியாவுக்கு வயது பதினாறு. பிளோரிடாவில் கல்வி பயிலும் அவளுக்கு ஆயிரம் காதல் அம்புகள் வந்தாலும் அதை அனாயாசமாக தள்ளி விட்டு, தான் ஆசைப்பட்ட மெரைன் டெக்னாலஜி எடுத்து அதில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறாள்.

"மார்ட்டின் வாட் டூ யூ மீன்?", என்றதும்,

"என் பையன் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்.", என்று அவர் சிரிக்க,

"யூ நாட்டி பேட் அங்கிள். நீங்க என்னோட மெண்டார் என்பது நினைவுல இருக்கா உங்களுக்கு?", என்று சிரித்துவிட்டு உடைமாற்றச் சென்றாள்.

அங்கே இளவயதில் டேட்டிங் செல்வது தவறாகக் கருதப்படுவது இல்லை. அந்நாட்டு பெற்றோரும் அதிகம் அதை பெரிது படுத்துவது இல்லை. அதனால் மார்ட்டின் அவரின் மகன், நதியாவின் மீதான எண்ணத்தை சொன்னதும், தன் மாணவியிடம் கிண்டலாக உரைத்துவிட்டார்.

அவருக்கு நன்றாகத் தெரியும் நதியா யாரையும் தன் அருகில் கூட அனுமதிக்க மாட்டாள் என்று. அவளின் பிறந்த நாடு அப்படி என்று அவரும் தன் மகனிடம் ஏற்கனவே பெருமையாக சொல்லிவிட்டுத் தான் வந்தார்.

இவளும் அவரின் கேலி புரிந்து சிரித்ததும்,அவளின் கவலையை எண்ணி அவரும் கவலை கொள்ளலானார்.

ஏனிந்த பவழப்பாறைகள் இப்படி மாறுகின்றது என்று அவர் தாங்கள் எடுத்த வீடியோவை ஓடவிட்டு கவனிக்கலானார்.

★★★★

"ஹே.. அவரு வராரு டி", என்று தூணுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஒரு பெண் பேச, மற்றவளோ, "வாயை மூடு டி குரங்கே.." பார்த்தா கண்ணாலையே எரிச்சிடுவார். என்று புலம்பினாள்.

அவள் பார்த்த இடத்தில் யாருமற்று இருக்க,

"போயிட்டாரு போல டி. ச்ச...  உன்னை திட்டிக்கிட்டே அவரைப் பார்க்காம போயிட்டேன். போ", என்று புலம்பிவிட்டு திரும்பியவள் அரண்டு போனாள்.

அங்கே, வெண்ணிற வேட்டி சட்டையில், முன்னால் இருந்த முடிகளில் சில நரைகள் சேர்ந்திருக்க, அவை காற்றோடு இசைந்து அசைந்தபடி இருக்க, கண்களில் ஒரு தீட்சண்யத்துடன், கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு அவர்களை பார்த்துக்கொண்டு நின்றான் தீரேந்திரன்.

அவனைக் கண்டதும் கால்கள் நடுங்க, மெல்ல அவவிடம் விட ஓட எதனித்த அவர்களை, "ஒரு நிமிஷம்", என்று தடுத்தது அவனின் அழுத்தமான குரல்.

இருவரும் திரும்பி அவனைப் பார்த்து அசடு வழிந்ததும்,

"ஏம்மா இப்படி பண்றீங்க? உங்க வயசென்ன என் வயசென்ன? படத்துல காட்றான்னு நீங்களும் உங்க மனசை கண்டபடி அலைபாய விடாதீங்க மா. போங்க. ஒழுங்கா வீடு போய் சேருங்க.", என்று அதட்டி அனுப்பி வைத்துவிட்டு, குருவாயூரப்பன் சன்னதிக்கு வந்து நின்றான். அவன் பின்னொடு வந்த குருக்கள்,

"என்ன இந்திரா, இன்னிக்கும் வந்த பொண்ணுங்களை விரட்டி விட்டுட்டியே?", என்று வருத்தம் கொள்ள,

"நீங்க முதல்ல என்னைப் பத்தி இங்க வர்ற பொண்ணுங்க கிட்ட சொல்றத நிறுத்துங்க ஐயா.  தினமும் எனக்கு இதே வேலையா?" என்று சலித்தான்.

"என்னப்பா, நீ எவ்ளோ நல்ல புள்ள. ஒரு கல்யாணம் கார்த்திகை வேண்டாமா? இப்படியே எத்தனை நாள் இருக்கப்போற?" என்று வருத்தம் காட்டினார்.

"உங்க அக்கறை எனக்கு புரியுது. ஆனா எனக்கு தான் விருப்பம் இல்லன்னு சொல்றேனே.. நீங்களும் எங்க அம்மாவும் ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க?? எனக்கென்ன வாலிப வயசா?", என்று எரிச்சல் பாதியும் சலிப்பு மீதியுமாக சொன்னவனை,

"நாங்க பல வருஷமா உன்னோட போராடிண்டு தான் இருக்கோம். நீ தான் கல்லாட்டம் எங்களை கண்டுக்காம இருக்க. வேணா பாரு, உங்க அம்மா உனக்கே தெரியாம கல்யாண ஏற்பாடு பண்ண போறாங்க.", என்றதும் அவன் மனதில் மின்னலாய் அவள் முகம் வந்து போனது.

உதட்டில் புன்னகையை தாங்கி, "அப்படி எதாவது செஞ்சா நான் பாட்டு கிளம்பி போய்கிட்டே இருப்பேன் ஐயா. என்னை யாராலையும் இழுத்து கட்டி வைக்க முடியாது", என்று தெளிவாக உரைத்துவிட்டு நகர்ந்தான்.

அவனைக் கண்டு பெருமூச்சு விட்டவர். 'இவனைப் பார்த்தா வயசானது போலவா இருக்கு. இருந்து இருந்து முப்பத்தி ஒன்பது வயது ஒரு வயசா? கல்யாணம் பண்ணிண்டா என்னவாம். பாவம் அந்தாத்து மாமி. என்னமா பொலம்பிட்டு போறா.. ஹ்ம்ம்.. யாரைச் சொல்றது? குருவாயூரப்பா நீதான் இவாளுக்கு ஒரு நல்ல வழி காட்டணும்', என்று வேண்டிக்கொண்டார்.

தன் வேட்டியின் நுனியை இடது கரத்தில் பிடித்தபடி வலது கரம் வீசி கம்பீரமாக நடையிட்ட தீரேந்திரன் மனம் அவனைக் கேளாமல் வேறிடம் சென்றிருந்தது.

தன் தாய் செய்யும் அனைத்து திருமண ஏற்பாடுகளையும் தன்னால் இயன்றவரை சிரித்த முகமாய் தட்டிகழித்துக் கொண்டிருந்த இந்திரனுக்கு ஏனோ இனியும் அதையே தொடரும் எண்ணமில்லை. இன்றே தாயிடம் உண்மையை உரைத்துவிட்டு, இங்கிருந்து சில நாள் யாரும் அறியாத இடத்திற்கு சென்று வர மனம் ஏங்கியது.

★★★

வணக்கம் நண்பர்களே..

இனி தினமும் மாலை நேரத்தில் உங்களை சந்திக்க தீரேந்திரனும் நதியாவும் வந்து விடுவார்கள்.. உங்கள் ஆதரவை இந்த கதைக்கும் அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

Continue Reading

You'll Also Like

96 6 2
கி.பி 1750 ஆண்டு- " வனமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது " என்ற பெயர் பலகையை பார்த்ததும், அந்த வழிப்போக்கன், குதிரை கடிவாளத்தை கெட்டியாக பிடித்து கொண்ட...
126 9 1
மகாபாரதம் மண்ணணாசை மண்ணோடு மண்ணாக்கும் என மாந்தருக்கு உணர்த்திய மாபெரும் காவியம் நற்பாதையை கீதையின் மூலம் ராதையின் மன்னவன் நமக்குணர்த்திய கதை. இக்...
741 8 1
உறவின் அழகிய தேடல்..
13 0 3
hyunjin padrastro