காதல்கொள்ள வாராயோ...

By Madhu_dr_cool

37.5K 1.9K 1.1K

Love and love only. A refreshing read, guaranteed. More

1
2
3
4
5
6
7
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
Mood boards!

8

820 45 43
By Madhu_dr_cool


அவன் சென்றதும் மாதவன் தன் அன்னையிடம், "இருந்தாலும் அம்மா.. தனியா பொண்ணுப் பார்க்கப் போறதெல்லாம்.." என இழுக்க, உஷாவும் ஆமோதிப்பாக உம்கொட்டினார். பர்வதமோ, "பொண்ணை சம்பிரதாயமா பார்த்தா மட்டும்? உடனே கல்யாணம் நடந்துடுமா? சராசரிப் பையனையா பெத்து வச்சிருக்கீங்க ரெண்டு பேரும்? Oversmart, overachiever, overthinker. சாதாரண ரூல்ஸ் எல்லாம் அவனுக்குப் பொருந்தாதே! இப்படியாச்சும் எதாவது நல்லது நடக்கட்டும்னு விடுவீங்களா.." என்று அவர்களை அடக்கினார்.

மாதவனும் உஷாவும் ஒருவரையொருவர் சங்கடமாகப் பார்த்துக்கொண்டனர். ஆனாலும் பர்வதத்தின் பேச்சிற்கு மறுபேச்சுப் பேசவில்லை இருவரும்.

காலை ஆதித் குளித்துத் தயாராகி உணவுக்கூடத்திற்கு வந்தபோது, மூன்று காக்கிக் கவர்களை நீட்டினார் பர்வதம்.

"ஆதித், நீ கேட்டமாதிரியே மூணு பொண்ணுங்களை செலக்ட் பண்ணியிருக்கோம். ஃபோட்டோவும் அட்ரஸும் இதுல இருக்கு."

கவர்களைக் கையில் வாங்காமல், "அட்ரஸை மட்டும் டெக்ஸ்ட் பண்ணுங்க போதும், நான் பாத்துட்டு வந்துடறேன்" என்று வெறுமையாக சொல்லிவிட்டு அவன் எழுந்துசெல்ல முயல, பர்வதம் அவனைக் கைப்பிடித்துத் தடுத்து நிறுத்தினார்.

"ஃபோட்டோவைக் கூட பார்க்க வேணாமா? அந்த அளவுக்குக்கூட உனக்கு இதுல அக்கறையில்லையா ஆதித்?"

பாட்டியின் குரல் கவலைதோய்ந்து ஒலிக்க, ஆதித் உடனே முகத்தை மாற்றிக்கொண்டு புன்னகைத்தான்.

"ஒரு பொண்ணோட கேரக்டரை ஃபோட்டோவைப் பார்த்து முடிவு பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல பாட்டி."

காரில் அவன் கிளம்ப, பர்வதம் அவன் மனதை அறியாமல் பெருமிதமாய் புன்னகைத்தார்.

முதல் வீடு மிகப் பிரமாண்டமாக இருந்தது. ரைஸ் மில் ஓனர் வீடு அது. பட்டுப் புடவையிலும் தங்க நகைகளிலும் ஜெகஜோதியாக மின்னினாள் பெண். அதற்கு நேர்மாறாய் சவரம் செய்யாத இருநாள் தாடியும், கலைந்த கேசமும், கசங்கிய சட்டையுமாய் இருந்தான் ஆதித். ஆனால் பெண்வீட்டார் அவற்றையெல்லாம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மூச்சுவிடாமல் பர்வதம்மாளின் பெருமையைப் பேசினார் பெண்ணின் தந்தை. வழக்கமாக உபசரிப்புகள் முடிந்தபின்னர், "பொண்ணுகிட்ட எதாவது தனியா பேசணும்னா பேசுங்க மாப்பிள்ளை!" என்றார் அவர்.

அவரது வார்த்தைப் பிரயோகத்தில் புருவம் தூக்கியவன், மறுக்காமல் எழுந்து உள்ளே சென்றான்.

ஒன்றும் பேசாமல் இருவருமே நேரத்தைக் கடத்தினர். ஒரிருமுறை பார்வைகள் சந்தித்தபோது, அப்பெண் வெட்கத்தோடு சிரித்தாள். ஆதித் உணர்வற்று நின்றான். சில நிமிடங்கள் அமைதியாகக் கழிய, அவள் ஏதோ சொல்ல வாய்திறந்தாள்.

"நீங்க.. அழகா இருக்கீங்க. ஷேவ் பண்ணீங்கன்னா, இன்னும் ஸ்மார்ட்டா இருப்பீங்க.."

அதீத வெட்கத்தோடு அவள் பேச, அவனோ உள்ளுக்குள் தனது திட்டத்தைத் தீட்டிவிட்டு நிமிர்ந்தான் விஷமத்தனமாக.

"என்னங்க பண்ணறது.. இதெல்லாம் அவளுக்காக செய்வேன்... அவ போனதுக்கப்பறம் எனக்கு இதெல்லாம் பண்ணிக்கவே பிடிக்கிறதில்ல.. யாருக்காக செய்யணும் இதெல்லாம்? எதுக்காக?"

பலத்த சலிப்போடு பேசுவதுபோல் அவன் பேச, அப்பெண் குழப்பமாக முகம் சுளித்தாள்.

"என்ன சொல்றீங்க?"

"அடடே.. உங்ககிட்ட சொல்லலியா? என் பார்வதி என்னைவிட்டுப் போயி மூணு வருசமாகுதுங்க.. நான் இன்னும் அவளையே நினைச்சு தேவதாஸா இருக்கேன்.. இப்பக்கூடப் பாருங்க, செத்துப்போன என் பார்வதியைப் பாக்குற மாதிரியே இருக்கு உங்களப் பாத்தா... ஐயோ பார்வதி.. அநியாயமா போயிட்டயே.."

முகம்நிறைய சோகத்தை அப்பிக்கொண்டதுபோல் அவன் அழுது புலம்பிட, பெண்ணுக்கு வியர்த்தே விட்டது. அங்குமிங்கும் பதற்றமாகப் பார்த்தாள் அவள். அவன் உள்ளூறச் சிரித்துக்கொண்டான்.

"அதைவிடுங்க.. என் பார்வதி ஞாபகமா, கல்யாணத்துக்கு அப்பறம், உங்களையும் நான் பார்வதின்னே கூப்பிடட்டா?"

அவ்வளவுதான்!

"அப்பா!!" என அலறிக்கொண்டு அறையை விட்டே ஓடிவிட்டாள் அப்பெண். தன் சாமர்த்தியத்தை மெச்சிக்கொண்டு, தனக்குள் சிரித்துக்கொண்டான் அவன்.

கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அவனை வெளியேற்றினார் பெண்ணின் தந்தை. திட்டம் வெற்றிபெற்ற களிப்பில் சீட்டியடித்துக்கொண்டே வந்து காரில் அமர்ந்தான் ஆதித்.

'ஒரு விக்கெட் டௌன்! இன்னும் ரெண்டே ரெண்டு தான்!'

உற்சாகமாக வண்டியை உயிர்ப்பித்தவன், அடுத்த விலாசத்தை நோக்கி விரைந்தான். அங்கும் கிட்டத்தட்ட அதே கதை. அப்பெண்ணோ ஒருபடி மேலே போய், கத்தி ஆர்ப்பாட்டம் செய்து சட்டையைப் பிடித்துவிட்டாள். "வெளியே போடா!" என்று அவள் கத்த, குடும்பத்தினர் அதிர, அவனோ எதுவும் தெரியாதவன்போல தோளைக் குலுக்கிவிட்டு வெளியேறினான்.

வெற்றிக்களிப்போடு காரில் அமர்ந்து, மூன்றாவதாக இருந்த விலாசத்தைப் பார்த்தான்.

'சிதாரா சீனிவாசன்,
10, காளியம்மன் கோவில் தெரு,
காந்திநகர்'

'இவளையும் எப்படி அலற வைக்கிறேன் பார்!!' எனத் தனக்குள் சொல்லிக்கொண்டே காரைச் செலுத்தினான் காந்திநகருக்கு.

அது நேற்று வந்த தெருவென்பதும், அங்கிருப்பது 'பர்வதம் இண்டஸ்ட்ரீஸ்' தொழிலாளர் குடியிருப்பு என்பதும், அங்கே சென்றதும்தான் தெரிந்தது அவனுக்கு. பத்தாம் நம்பர் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு, முன்னேற்பாடாகத் தலையைப் பரபரவெனக் கலைத்துவிட்டுக்கொண்டான் அவன். கதவைத் திறந்த நடுத்தர வயதுடைய மனிதரைப் பார்த்து, ஒருமாதிரி அசட்டுத்தனமாகச் சிரித்தான்.
"பொண்ணுப் பார்க்க பாட்டி அனுப்பினாங்க"

சீனிவாசன் ஒருமாதிரிப் பார்த்தாலும், பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனை உள்ளே அழைத்து அமரவைத்தார்.

"சிதாரா!" உள்ளே நோக்கி அவர் குரல்கொடுக்க, முதலில் காபி ட்ரேயைத் தாங்கிய இரண்டு கைகள் தெரிந்தன சமையலறைத் திரைச்சீலை வழியே. இருகைகளாலும் காபி ட்ரேயைப் பிடித்திருந்ததால் திரைச்சீலையை விலக்கத் தெரியாமல் அப்பெண் தயங்கி நிற்பதுபோல் தெரிந்தது. லேசான முனகல் சத்தம் கேட்க, சீனிவாசன் அதிருப்தியாகப் பார்க்க, ஆதித் கொஞ்சம் சந்தோஷப்பட்டான். தன் வேலை சீக்கிரமாகவே முடிந்துவிடுமெனத் தோன்றியது.

வேறொரு பெண்மணி திரைச்சீலையை விலக்கி வழிசெய்து கொடுக்க, காபித் தட்டை ஏந்திய கைகள் வெளியே வந்தன கூடத்திற்கு. ஆதி பெயருக்காக நிமிர்ந்து பார்க்கலாமென நிமிர்ந்தவன், அவளைக் கண்டதும் அதிர்ச்சியானான்.

முன்தினம் சாலையில் பார்த்த நீலச் சுடிதார் பெண்தான் அங்கே நின்றிருந்தாள், கண்களில் கலவரத்தோடு.

முன்பு பார்த்த இரு பெண்களைப் போலின்றி, பட்டுப் புடவை, நகைகள், அலங்காரம் என்று எதுவுமே இன்றி, வெறும் வெள்ளை காட்டன் சுடிதாரும் ஆரஞ்சு வண்ண துப்பட்டாவும் அணிந்திருந்தாள் அப்பெண். தலை லேசாகக் கலைந்திருந்தது. சில முடிக்கற்றைகள் நெற்றியில் விழுந்திருந்தன. புருவங்களுக்கிடையே குட்டியாக வைத்திருந்த கருப்புப் பொட்டு அவள் நெற்றியைச் சுருக்கியதில் பாதி மறைந்திருந்தது. காபியை அவனிடம் நீட்டாமல் மேசைமீது வைத்துவிட்டுத் தந்தையின் பின்னால் நின்றுகொண்டு அவனை முறைத்தாள் அவள்.

தன்னை ஏன் முறைக்கவேண்டும் எனப் புரியாமல் ஆதி குழப்பமாகப் பார்க்க, சீனிவாசனோ அவன் முன்னிலையில் மகளை எதுவும் சொல்ல முடியாதபடி அமைதியாக இருந்தார்.

சமையலறையிலிருந்து வெளிவந்த பெண்மணி, அவளது அன்னையாக இருக்கவேண்டும், ஆதியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அப்பெண்ணை முறைத்தார். அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

"காபி எடுத்துக்கங்க தம்பி.." என உபசரித்தார் சீனிவாசன்.

"நோ தேங்க்ஸ்" சலனமற்று மறுத்துவிட்டு, இனிப்புத் தட்டிலிருந்து ஒரு பால்கோவாத் துண்டை மட்டும் எடுத்துக் கடித்தான் ஆதி.

சிலநிமிடங்கள் மவுனமாக இருந்தபின், "பொண்ணுகிட்ட தனியா பேசணும்" என்றான் அவன். சீனிவாசனும் அவர் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சீனிவாசன் கண்ணாலேயே ஏதோ பேசிவிட்டு, பெண்ணிடம் திரும்பினார்.

"போய் பேசிட்டு வா."

அவள் வாய்பேசாமல் பால்கனியை நோக்கி நடக்க, ஆதி எழுந்து பின்தொடர்ந்தான்.

அவன் வந்தும் வராமலேயே அவள் பதற்றமாக அவனிடம் திரும்பி, "சார்.. தயவுசெய்து என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட முடியுமா? ப்ளீஸ்..?" என்றாள் கெஞ்சும் தொனியில்.

ஆதித் அதிர்வது இரண்டாவது முறை அப்போது.

"ஏன்?"

அவன் ஏன் அப்படிக் கேட்கிறானென சரியாகப் புரியாத தாராவோ, "தப்பா நினைச்சுக்க வேணாம். நீங்க அழகாத்தான் இருக்கீங்க. நல்ல ஹைட், வெய்ட், ஸ்டைல். லட்சணமா இருக்கீங்க; வேற எத்தனையோ பொண்ணுங்க கிடைப்பாங்க உங்களுக்கு. என்னை மட்டும் வேணாம்னு சொல்லிடுங்க ப்ளீஸ்" என்றாள் அவசரமாக.

தன்னைப்பற்றிச் சொன்ன வர்ணனைக்குச் சிரித்துக்கொண்டவன், அவளை மீண்டும் ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான்.

தனது ஆறடி உயரத்திற்கு, இவள் பொருந்தாத உயரம். மிஞ்சிப்போனால் ஐந்தே கால் அடி இருப்பாள். முகத்தில் ஒரு தன்னம்பிக்கை இல்லை. மாறாகத் தயக்கமும் கவலையும் இருந்தன. கைகள் ஓரிடத்தில் நிலையாக இல்லை. முடியை ஒதுக்கினாள், விரல்களைப் பிணைத்தாள், மீண்டும் பிரித்தாள், நெற்றியைத் தேய்த்தாள், நகத்தைக் கடித்தாள். கால்களும் அசையாமல் நிற்கவில்லை. அடுப்பின்மீது நிற்பவள்போல அங்குமிங்கும் நகர்ந்தாள் பதற்றமாக.

"நான் கேட்ட கேள்விக்கு பதில்?"
மீண்டும் வினவினான் ஆதித், இம்முறை சற்றே மெத்தனமாக. இந்த வரனும் கைவிட்டுப்போன சந்தோஷம். அவரவர் எடுக்கும் முடிவு அவனுக்கு சாதகமாகத் தானே இருக்கிறது!

தாரா பெருமூச்செரிந்தாள்.

"சார், நான் செகண்ட் இயர் அக்கவுண்டன்சி ஸ்டூடண்ட். இன்னும் படிக்கணும்; பெரிய சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ட் ஆகணும்; நிறைய ஆசை இருக்கு. இதெல்லாம் கல்யாணத்தை பண்ணிக்கிட்டு செய்ய முடியாது. எனக்குக் கல்யாணமே வேணாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். தயவுசெய்து என்னை பிடிக்கலைன்னு சொல்லிடறீங்களா?"

ஆதித்திற்கு ஏனோ அந்த சூழ்நிலை உற்சாகம் கொடுத்தது. தன்னைப்போலவே திருமணங்களை வேண்டாமென சொல்லும் ஒரு சக ஜீவனைப் பார்த்த மகிழ்ச்சியாக இருக்கலாம். இல்லை இப்பெண்ணை பயமுறுத்தவோ, வெறுப்பேத்தவோ அவசியமின்றி இலகுவாக இச்சிக்கல் முடிந்துவிட்டதாலும் இருக்கலாம்.

ஆதித் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

"தேங்க்ஸ் சோ மச், மிஸ்.சிதாரா சீனிவாசன்."
அவன் ஏன் தனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று புரியாமல் யோசனையாக அவனைப் பார்த்தாள் தாரா. அவனோ தனக்குள் சிரித்தவாறே நகர்ந்தான் அங்கிருந்து.

அவன் பால்கனியிலிருந்து வீட்டினுள் செல்ல, அவன் முகத்தை எதிர்பார்ப்பாகப் பார்த்தவாறு காத்திருந்தனர் சீனிவாசனும் தேவியும். இருவரையும் பார்த்துக் கைகூப்பியவன், "என்னை பொண்ணுப் பார்க்க இன்வைட் பண்ணதுக்கு தேங்க்ஸ். ஆனா சாரி, எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்ல. நான் வரேன்." என்றுவிட்டு அவர்களின் பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினான் ஆதித். தாராவின் நிம்மதிப் பெருமூச்சு நன்றாகக் கேட்டது அவனுக்கு.

ஏனோ இதழை நீங்காப் புன்னகையுடனே அவன் காருக்கு வந்தபோது, யாரோ தன்னைப் பார்ப்பதுபோல உணர்ந்தவன் தலையை உயர்த்தி பால்கனியை நோக்க, அங்கே அவள் நின்று கைகூப்பினாள் நன்றியாக. மீண்டுமொருமுறை அவளைப்பார்த்துப் புன்னகைத்தவன், காரில் அமர்ந்து அதை உயிர்ப்பிக்க, அவன் போகும்வரை நின்று பார்த்திருந்தாள் அவள்.

******************************

வாவ்!!! ஆதி இப்படி திருட்டுத்தனம் பண்ணுவான்னு நினைக்கவே இல்ல!

இருந்தாலும் அந்தப் பொண்ணுங்க கொஞ்சம் பாவம்ல? ஆனா யாருக்கும் சங்கடம் வராம சமாளிச்சிட்டான், அதுவரைக்கும் சந்தோஷம்! ஹிஹி!!

தாராவும் ஆதித்தும் மறுபடி நேர்ல சந்திச்சிருக்காங்க, அடுத்து என்ன நடக்கப்போகுது? தாரா கல்யாணம் வேணாம்னு சொன்னா அவங்கப்பா என்ன சொல்லுவார்??

விரைவில் தெரிந்துகொள்ளலாம். அதுவரை வாக்குகள் அளிக்கவும், நண்பர்களுடன் பகிரவும்! நன்றி!!

மது.

Continue Reading

You'll Also Like

13.4K 836 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
53K 3.7K 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆன...
89.4K 6.3K 34
இரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.