வெளிச்சத்திற்கு
விடை கொடுக்க எண்ணி
என் வாழ்வின்
இருளை
துடைத்தவள் நீயே...
அன்றிரவு இருளை கிழித்துக்கொண்டு வானத்தில் பறந்து வந்துக்கொண்டிருந்தது அந்த பிரம்மாண்ட பறக்கும் தட்டு.
அதனுள்ளே பல யோசனைகளோடு அமர்ந்திருந்தாள் ரியா.
கிரகத்தின் அமைதியை கெடுத்ததற்காக ஒரு வருடம் பூமிக்கிரகத்தில் வாழ்ந்திடும் தண்டனையை பெற்றிருந்தாள் ரியா.
(அப்படி என்ன பண்ணியிருப்பானு நீங்க யோசிக்கிறது புரியிது. பிளாஷ்பேக் முடிந்ததும் நம்ம மேடமே அந்த சம்பவத்தை விவரிப்பாங்க.)
அவள் பறக்கும் தட்டினுள் ஏறுவதற்கு முன் அவள் அன்னையும் தந்தையும் பூமிக்கிரகத்தை பற்றி தாம் கேள்விபட்ட பல செவிவழிக்கதைகளை கதைகதையாய் கூறியிருக்க அதை கேட்டதிலிருந்தே அவளுக்கு உள்ளுக்குள் கலக்கமாகவே இருந்தது.
தனியே அமர்ந்திருந்தவளருகே வந்தான் அவளின் நண்பன் தினாகோ ஹதிசு யாத்மியூ தவாசே.(இனி கதையில் தவா என்று விளிக்கப்படுவான்)
“என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு? என்றபடியே அவளருகே வந்து அமர்ந்தவனை திரும்பி பார்த்த ரியா
“பூமிக்கிரகத்துல பூச்சாண்டி,பூசாரிலாம் இருப்பாங்கனு அம்மா அப்பா சொன்னாங்க. அது தான் அவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.” என்று ரியா கூற
“அங்கு அது மட்டும் இல்ல. இன்னும் நிறைய இருக்கு. அந்த கிரகத்து வாசிகளோட சாப்பாடு மாதிரி வேற எந்த கிரகத்துலயும் இல்லை. நேரத்துக்கு காலத்துக்கு மனநிலைக்கு ஏத்தமாதிரியெல்லாம் விதவிதமாக சாப்பிடுவாங்க. அவங்களை மாதிரி அதிஷ்டசாலிங்க இந்த சுத்து வட்டார பால்வெளியிலேயே இல்லைனா பாரேன்.” என்றவனை இப்போது சந்தேகமாக பார்த்தாள் ரியா.
“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"
“என்னோட 213 வது குற்றத்துக்கு தண்டனையா பூமிக்கு தான் அனுப்புனாங்க.” என்று அவன் சாதாரணமாக சொல்ல அவனை விழிவிரித்து பார்த்தாள் ரியா.
