கோரநாடு

Bởi BlitzkriegKk

636 100 184

வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய் ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும் கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற வா... Xem Thêm

கோரநாடு - 1. எழாலேறு
கோரநாடு- 2. நீர்ச்சிலை
கோரநாடு- 3. மாமன்னர் வரகுணதிருமாறன்
கோரநாடு- 5. அரசியல் நரபலி
கோரநாடு- 6. மேகமிடை மின்னல்
கோரநாடு- 7. வேல்விழி
கோரநாடு- 8. நாகபூமி
கோரநாடு- 9. மஞ்சத்துறை நெஞ்சம்
கோரநாடு -10. மரணக்கோட்டம்
கோரநாடு-11. கனவும் களவும்
கோரநாடு 12- இதயமொழி இனியமொழி
கோரநாடு- 13. காலநெருப்பு

கோரநாடு- 4. சதியரங்கம்

39 9 8
Bởi BlitzkriegKk


.

சதியரங்கம்:

முற்றிலும் மரத்தால் அமைக்கப்பட்டு சுற்றிலும் திரைச்சீலைகளால் மூடப்பட்டு எந்தவித ஒலியும் வெளியேறாதவாறு குறுகிய ஒற்றை வாயிலுடன் கட்டப்பட்டிருந்த அறை அது. அந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் வெறும் ஆறு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஆனால் அன்றைய சூழலில் அந்த ஆறு பேரே ஒட்டுமொத்த நாடும் என்று சொல்வதில் தவறில்லை.

அனைவரும் வந்தமர்ந்த பிறகு "மன்னரின் மறைவு இயற்கையானதல்ல என்று நாட்டில் அனைவரும் நம்புகிறார்கள். அதனால் பெரும் புரட்சி நடைபெற வாய்ப்புள்ளது இளவரசே!" என்று தொடங்கினார் துறவியின் உடையும் துறவறத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பெரிய வயிறும் பத்து விரல்களிலும் பவழ மோதிரம் அணிந்திருந்ததால் சிவந்த கதிர்க் கரங்களும் கொண்டு அதை விட சிவந்த விழிகளுடன் அமர்ந்திருந்த வடமலை அல்லிமுனி. சமண மதத்தைப் பரப்ப வந்து இந்நாட்டின் சட்டங்கள் இயற்றுமளவு முக்கியத்துவம் பெற்ற ராஜ தந்திரி.

"இருப்பினும் மன்னர் சிறியதொரு நாகத்தினால் தானே கொல்லப்பட்டிருக்கிறார். இது விபத்து தானென்று குழந்தைக்குக் கூடத் தெரியுமே. இந்த மக்கள் ஏன் இத்தனை முட்டாளாக இருக்கிறார்கள்?" என்றவாறே இருக்கையிலிருந்து எழுந்தார் தலைமைத் தளபதி கமலக் கணக்காயன். மறைந்த மன்னருக்காகப் பல போர்களில் வெற்றி பெற்றுத் தந்தவர். தமிழகத்தில் அந்நாளைய தலைசிறந்த வாள் வீச்சு நிபுணர். அரியணை மேலும் குறிப்பாக அந்தப்புரத்தின் மேலும் இரு கண்களையும் எப்போதும் வைத்திருப்பவர்.

"மக்களை முட்டாள் என்கிறீரா தளபதி? அதுவும் என் முன்னால்" என்ற குரல் அந்த அறையை நிரப்பியது. சில நொடிகள் அனைவரும் பேச்சடைத்துப் போய்விட்டனர்.

உறுதியான கால்கள் தரையில் அழுத்தமாகப் பதிய, கடுங்கோபத்தினால் கண்களில் அதிக ரத்தம் பாய்ந்ததால் சிவக்க, பேரிரைச்சலுடன் மூச்சு வெளியே வர, குண்டலமணிந்த காது மடல் விடைக்க, பழுப்பேறிய உதடுகள் துடிக்கக் கொந்தளிக்கும் முகத்துடன் கொதிக்கும் எரிமலைக் குழம்பு போன்ற பார்வையுடன் அவ்வறையின் நடுநாயகமாக எழுந்து நிற்பவனும் மன்னர் வெற்றித் திருமாறனின் மூத்த புதல்வனும் தற்போதைய கோரநாட்டின் ஒரே இளவரசனுமாகிய கரம்பத் திருமாறனை எதிர்நோக்கும் தைரியம் எவர்க்கும் இருந்திட வழியில்லை.

சில நேர அமைதியை அல்லிமுனி கலைக்கலானார். "இளவரசே! தாங்கள் கோபப்படுவது நியாயம்தான் என்றாலும் தளபதி கூறுவதிலும் பொருள் உள்ளது என்பதைத் தாங்கள் மனதில் இருத்த வேண்டும். முட்டாள் தனம் நிறைந்த இடங்களில் கலவரமும் போராட்டங்களும் நிகழும். அதேபோன்ற மனநிலையில் தான் மக்களும் உள்ளனர். நம் ஒற்றர்கள் தெரிவித்திருப்பதும் அதுவே. ஆகவே இந்த நிலையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளோம்."

"அப்படியென்றால் முன்பே தாங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டீர்?" என வினவினான் கரம்பன் மெல்லிய நகைப்புடன்

"நான் மட்டுமல்ல. நாங்கள் எல்லோரும்."

"எல்லோருமா? என்ன முடிவு?"

"இளவரசே! தாங்கள் அறியாததல்ல. இந்நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன் மறைந்ததும் அவரது வழித்தோன்றல் அரியாசனம் ஏறுதல் வழக்கம். ஆயினும் கோரநாட்டைச் சார்ந்த ஐந்து சிற்றரசுகளின் அரசர்களில் நால்வர் தங்கள் பதக்கங்களைச் சேர்த்து அதை ஆரமாக்கி ஐந்தாவது அரசரது பதக்கத்தை நடுவிலிட்டு அதை புதிய மன்னனின் கழுத்தில் அணிவிக்கவேண்டும். இதுவே ஐம்பேராயம் அணிவிக்கும் வழக்கமாகும். ஆக நமது சிற்றரசர்களான கொடுங்கண்ணான், கோட்பறையான், அமுதமறவன் மற்றும் தனிக்கோவேள் ஆகிய நால்வரும் மறைந்த நம் மன்னரது வாரிசு அதாவது தங்களைத் தம் மன்னராக ஏற்று இவ்வைம்பேராய வழக்கத்தை நிறைவேற்றுதல் அவசியமாகும். ஆனால் மன்னரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அனைவரும் நம்புகிறார்கள். ஆகவே மக்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட ஐயத்தை நிவர்த்தி செய்து ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டியது தங்கள் கடமை. ஏனெனில் நம் நாட்டின் அரசன் யாராக இருப்பினும் மக்கள் துணை மிகுந்த அவசியம்." என்று முடித்தார் அல்லிமுனி.

"சந்தேகங்கள் எப்படிக் கிளம்புகின்றன என்றறிவீரா மகாமந்திரியாரே?" என்று ராஜகீர்த்தி ஆச்சாரியாரை வினவினான் கரம்பன் கழுத்தை அவர்புறம் திருப்பாமல் கண்களை மட்டும் சுழற்றி.

"இல்லை இளவலே, இதற்கு முன் பேரரசர் வரகுணர் இறந்தது இயற்கை முறையில். ஆகவே அப்போது மக்கள் அவரது புதல்வர் புகழ் திருமாறனுக்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. ஆனால் புகழ் திருமாறன் மறைவு அப்படி நிகழவில்லை. அதன்பிறகு எண்ணற்ற குழப்பங்கள் வந்தன. உங்கள் தந்தை இதோ இங்கே அமர்ந்திருக்கும் சகாதேவரது துணைகொண்டு அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அது போலொரு நிலை தான் தற்போதும்" என்று அருகிலிருந்த சகாதேவனைக் காட்டிக் கூறினார் ராஜகீர்த்தி.

"இவையெல்லாம் ஏற்கனவே இளவரசர் அறிந்தது தானே. புதிதாக நிகழ்வன வேறு" என்று சட்டென பேச்சை மாற்றினார் சகாதேவன். வெற்றித் திருமாறனின் நண்பர் தானென்றாலும் பார்க்க முப்பது வயதுக்கு மேல் மதிக்கமுடியாது. இன்னும் உறுதியான உடற்கட்டும் அதைவிட அதிகமான மன உறுதியும் கொண்டவர். இன்றைய நாளில் அரண்மனையின் அத்தனை சூட்சுமங்களையும் அறிந்தவர். போர்களில் ஆர்வமுடன் பங்கேற்பதால் நிறைய தழும்புகளை உடலெங்கும் தாங்கியவர்.

"அப்படி என்ன புதிதாக நிகழ்கிறது?" என்றான் கரம்பன்.

"நான்கு சிற்றரசர்களும் அவர்களது பகுதிக்குட்பட்ட மக்களிடம் மன்னரது மரணத்தைப் பற்றிய ஐயங்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். கடந்த சித்ரா பௌர்ணமியன்று கூட மக்களை நல்ல உடல்நிலையில் சந்தித்த மன்னர் திடீரென பாம்பு கடித்து மரணமுற்றதை யாராலும் நம்பமுடியவில்லை" என்றார் சகாதேவன்.

"ஏன் என்னால் மட்டும் நம்பமுடிகிறதா? இரவுணவை என்னுடன் அருந்திய மன்னர் காலையில் மரித்ததை நம்பமுடியாமல் நடைபிணமாகத் தானே இருக்கிறேன்." என்று கூறும்போதே நா தழுதழுத்தது கரம்பனுக்கு.

"உண்மை தான் இளவரசே. ஆனால் தாங்களும் இப்படி வருந்தித் துயருற்றால் மக்களுக்கு யார் இருக்கிறார்? பழைய முறையோ புதிய முறையோ அனைத்தையும் சரிக்கட்டித் தங்களை ஆட்சியில் அமரவைக்க நாங்கள் இருக்கிறோம். சரிதானா சகாதேவரே?" என்று வினவி எழுந்துநின்றார் அல்லிமுனி.

"தங்கள் உத்தரவுக்கு நான் என்றும் அடிமைதானே முனிவரே" என்று சிறு புன்னகையுடன் அவர் கைமேல் கைவைத்து சூளுரைத்தார் சகாதேவன்.

"மிக்க மகிழ்ச்சி. ஆனால் நாட்டிற்குள் புதியதாகக் கொள்ளையர்கள் ஊடுருவுவதாகக் கேள்விப்பட்டேனே" என்று தன் ஐயத்தை எடுத்துவைத்தான் மன்னனாகப் போகும் கரம்பத் திருமாறன்.

"ஆம் மன்னரே. உண்மைதான். ஆனால் அதுவும் நம் நன்மைக்கே. முதலில் அவர்களை விரட்டி மக்களுக்குத் தங்கள் மேல் நம்பிக்கையை உண்டாக்குவோம். எதிரிகள் இருந்தால்தானே ஒற்றுமை நீடிக்கும்." என்று நகைத்தார் ராஜதந்திரி சகாதேவன்.

"அதுவும் நியாயம் தான். கொள்ளையர்களிடமிருந்து துவக்குவோம்" என்று புன்முறுவலுடன் கூறிக் கூட்டத்தைக் கலைத்தான் கரம்பன்.

அனைவரும் கிளம்பிய பின் சகாதேவனுக்கு மட்டும் புரியும்படியாக ஒரு சைகையைக் காட்டிவிட்டு கரம்பனுடன் நடந்தார் அல்லிமுனி.

அதனை மற்றுமிரு கண்களும் கவனித்தன...

Đọc tiếp

Bạn Cũng Sẽ Thích

2 0 1
"இந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழுங்கள்." ஒப்பற்ற கொலையாளி, குறியீட்டுப் பெயர்: ஹூவா, அவள் சிறுவயதில் இருந்தே தனது வாழ்க்கையைத் தொடங்...
254 8 1
அனார்கலியின் சலீம் 💕 சலீமின் அனார்கலி 💕
89 4 2
கி.பி 1750 ஆண்டு- " வனமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது " என்ற பெயர் பலகையை பார்த்ததும், அந்த வழிப்போக்கன், குதிரை கடிவாளத்தை கெட்டியாக பிடித்து கொண்ட...
7 0 1
காதல் ஜாதி மதம் நிறம் காலம் அனைத்திற்கும் அப்பாற்பட்டது